சபரகமுவ பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் இடம்பெற்ற மாணவர் மரண சம்பவம் தொடர்பில், அந்தப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் மே 16ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும், இது எதிர்காலத்தில் யாரும் இத்தகைய தவறுகளை செய்யாத வகையில் ஒரு பாடமாக அமைய வேண்டுமென்றும் சமூக வலைத்தளங்களில் பலர் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனுடன் சம்பந்தப்பட்ட புகைப்படம் தொடர்பாகவும் விவாதங்கள் எழுந்துள்ளன. அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டதாக சிலர் சுட்டிக்காட்டி வருகின்றனர். எனினும், இதுவரை அதனை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் தகவல்கள் வெளியாகவில்லை.
விசாரணை தீவிரம்
சபரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை எட்டு ஆகியுள்ளது.
பகிடிவதை காரணமாக சரித் தில்ஷான் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மாணவர் தானாக எழுதிய கடிதத்தில் மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சித்திரவதைகளும் காரணமாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் தொடர்கிறது.
இந்தப் பின்னணியில், முதலில் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வர் கடந்த மே 4ஆம் தேதி இரவு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு, அடுத்த நாள் பலாங்கொடை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் அவர்களை மே 16ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இன்று (மே 5) அதே சம்பவம் தொடர்பாக மேலும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட புதிய நான்கு மாணவர்களும் நாளை (மே 6) பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவத்தையடுத்து, சபரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுனில் சாந்தவால் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. அதேவேளை, உயர்கல்வி அமைச்சும் தனிப்பட்ட விசாரணைக்குழுவை அமைத்துள்ளது.
சமனலவெவ காவல்துறையினர், பகிடிவதை சம்பவத்தில் தொடர்புடைய என சந்தேகிக்கப்படும் 20க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில், விசாரணை தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இரண்டு கட்டமாக இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான நீதிமன்ற விசாரணைகளும், உயர் கல்வி நிர்வாக நடவடிக்கைகளும் சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
0 Comments